top ads

பெண் களுக்குக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் களுக்குக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மார்ச், 2015

30 வயதில் எலும்பு அடர்த்தி குறையுமா ?

30 வயதில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு லோ போன் டென்சிட்டி பிரச்னை வரும். அது நீங்களா?’, ‘கால்சியம் போதவில்லை எனில் இடித்துக் கொண்டாலே, எலும்பு உடைந்துவிடும்’ இப்படி பெண்களை அச்சுறுத்தும் விளம்பரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இது உண்மையா?

எலும்பும் ஒரு திசுதான். புதிய எலும்பு செல் உருவாவதும், வயதான செல் மறைவதும், உடலில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். பொதுவாக, வயது அதிகரிக்கும்போது, எலும்புகளின் அடர்த்தி  குறையும். அதிக அளவில் குறையும்போது, எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன.

கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையும்போதும், எலும்பின் அடர்த்தி குறைகிறது. இதனால், எலும்பு பலவீனமடையத் தொடங்கும். பிறந்த குழந்தைகளுக்கு எலும்பு மிகவும் மிருதுவாக இருக்கும். குழந்தை வளர வளர, எலும்புகள் உறுதியடையும்.  எலும்புகள் வலு குறைந்துபோனால், லேசாகத் தவறி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். இளம் வயதில் எலும்பு ஆரோக்கியத்துடன் இருந்தால், அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படாது.

சனி, 10 ஜனவரி, 2015

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு ரக  மாதுளை பழங்களில் அதிக அளவு சக்தி உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்பு, சர்க்கரை,  சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இனிப்பு மாதுளம்  பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை நீக்குகிறது. ரத்த வயிற்றுப்போக்கிற்கு  சிறந்த மருந்தாக விளங்குகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.

பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய அனைத்து வகையான  அல்சரையும் குணமாக்குகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் போன்றவை குணமாகும். ரத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம்  அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை  உண்டாக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது.

புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாக சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி  2 அல்லது 5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும். மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால்  அனைத்து வகையான பித்த நோய்களும் தீரும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம்  உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு நீங்கும். உடல்  குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும்  உறுதிப்படும். மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரம் போட்டு அதில் பாதாம் எண்ணெய் 15 மில்லி அளவு ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால்  எண்ணெய் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து  காலை உணவுக்கு பிறகு தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் பெறும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப்  பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே பூவின் பொடியை மூன்று தினங்களுக்கு கொடுத்தால் பலன் கிடைக்கும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு  சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போன்றவை தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை,  மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும். மாதுளம் மொட்டுக்களை காய வைத்து  பொடித்துக்கொண்டு சிறிதளவு ஏலம், கசகசா ஆகியவற்றை பொடித்து கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட  நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.  தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25  கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு  நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களை தலையில் வைத்து கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்.

மாதுளம் பூக்களுடன் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து 30 மில்லி எடுத்துக்கொண்டு அதில் பசு  வெண்ணெய் சேர்த்து கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை குணமாக்கும். மாதுளம்பூச்சாறு 300 கிராம்  சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை,  மாலை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால்  எல்லா விதமான மூலநோயும் விலகும்.

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றை சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில்  கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பம் தொடர்பான நோய்கள் குணமாகும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும்  பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன்  சுரப்பின் அளவு அதிகரிக்கிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை  பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.

செக்ஸ் உணர்வு இல்லாதவர்களுக்கு மாதுளம்பழச்சாறு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனவும், ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம்  என்று அழைக்கப்பம் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான  செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease)  எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்!
பிழையாகிப் போன உணவுப் பழக்கம்!
இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ''ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.
தாண்டவமாடும் தைராய்டு!
வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது அவசியம். தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். தவிர, மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம்.
என்ன செய்ய வேண்டும்?
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்.. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வறுத்த, பொரித்த, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இனிப்பை குறைத்தல் இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது மிக நல்லது. எக்காரணம் கொண்டும் உப்பை திறந்து வைக்க வேண்டாம். அதனால், உப்பில் உள்ள அயோடின் காற்றில் கரைந்துவிடும். முக்கியமாக, முளைகட்டிய பயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது'' என்றார் டாக்டர் பிரேமலதா.
அம்மா... குண்டம்மா!
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?
இதற்கு பதில் சொல்கிறார், மகப்பேறு சிறப்பு மருத்துவர் பிரபா. ''கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக 8 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். குழந்தையின் வளர்ச்சி வேண்டி இந்நேரத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவால் அதிகரிக்கும் எடை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. என்றாலும், முடிந்தவரை மாதத்துக்கு 1 முதல் 2 கிலோவுக்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பிறகும், பாலூட்டும் காரணத்தால் எடுத்துக்கொள்ளும் அதிக உணவு, உடல் எடையைக் கூட்டுவது இயல்பு. ஆனால், இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்துக்குப் பிறகும் சரி, மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் இருந்தும்... சிசேரியன் எனில் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்த பிறகும் உடற்பயிற்சியைத் தொடங்கலாம். ஆனால், பெண்கள் பலரும் பிரசவத்துக்குப் பிறகு கவனம் அனைத்தையும் குழந்தைக்குக் கொடுத்து, தங்கள் உடம்பை கவனிக்க மறக்கிறார்கள். பால் கொடுக்கும் தாய்க்கு வீட்டில் உள்ளவர்கள், 'பச்ச உடம்பு... நல்லா சாப்பிடணும்...’ என்று கூறி, தேவையான காய்கறி, பழங்களைவிட, தேவையற்ற நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை அதிகம் கொடுப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்யவிட மாட்டார்கள். ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் சரிவிகித உணவிலும், தகுந்த உடற்பயிற்சியிலும்தான் இருக்கிறதே தவிர, தேவையற்ற உணவிலும், தேவைக்கு அதிகமான ஓய்விலும் இல்லை. இப்படி உணவுக் கட்டுப்பாடு அறுந்து போவதுடன், உடற்பயிற்சியும் இல்லாமல் போவதுதான் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிக்கக் காரணம். ஆனால், இது கை மீறிய செயல் இல்லை, கட்டுக்குள் கொண்டு வரக்கூடியதே. தேவை...முயற்சியும், உடற்பயிற்சியுமே. இதை பின்பற்றாவிட்டால், உடல் எடை தொடர்ந்து அதிகரித்து, ஒபிஸிட்டி எனும் நோயில் கொண்டுபோய் நிறுத்தும்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் பிரபா.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ன்னு சும்மாவா சொன்னாங்க?!

அன்று...
1. அம்மி, ஆட்டுரல், தண்ணீர் குடம் சுமப்பது என்று வீட்டு வேலைகளே பெண்களுக்கான உடற்பயிற்சியாக இருந்தன. அதிலும், கோலம் போடுவது சிறந்ததொரு யோகாசனம். கவிழ்ந்து கிடக்கும் கருப்பையை நேராக்கவும், இடுப்பு எலும்பு விரிவடையவும் வழிவகுக்கும். இதேபோல் ஆண்கள் சுமை தூக்குவது, ஏர் உழுவது என உடலுக்கு ஆரோக்கிய மான வேலைகளை விரும்பிச் செய்தார்கள்.  
2. குழந்தைகள் ஓடியாடி விளையாடிய தால் உடலின் அத்தனை பாகங் களுக்கும் இயக்கம் கிடைத்தது. இதனால் ஒபிஸிட்டி அவர்களை நெருங்க பயந்தது.
3. பிரசவத்துக்குப் பின்னரே பெண்கள் உடல் எடை அதிகரித்தார்கள்.
4. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம்.
5. உடலுக்கு பயிற்சி தரக்கூடிய விளையாட்டுகளும், வேலைகளுமே பொழுதுபோக்கு விஷயம். அதனால் சாப்பிடும் உணவின் கொழுப் புகள் உடனுக்குடன் கரைந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்று...
1. அனைத்து வேலைகளும் ஒரு ஸ்விட்சை ஆன் செய்து முடித்துவிடும் அளவுக்கு எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. அநேகம் பேர் ஒரு நாளின் பாதி தினத்துக்கு மேல் கணினி முன் அமர்ந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல். இதனால், 'மென்டல் ஸ்ட்ரெய்ன்’ அதிகரிக்கிறதே தவிர, எந்தவித 'ஃபிஸிகல் எக்சர்சைஸும்’ கிடைப்பதில்லை.
2. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் சென்று விளையாட அனுமதிப்பதில்லை. அதனால், வீடியோ கேம் அடிமைகளாகவும், நோய் சங்க உறுப்பினர்களாகவும் இளைய சமூகம் மாறிவருகிறது.
3. ஜங்க் ஃபுட் மோகத்தால் வளரிளம் வயதுப் பெண்களில் பலர் இரண்டு மடங்கு எடையுடன் இருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
4. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்கள் பலரையும் இன்றைக்கு சோம்பேறிகளாக மாற்றி வர, பக்கத்து கடைக்கு சென்று வரக்கூட பைக் எடுப்பதும்... ஆன்லைனில் வீட்டுக்கே பொருட்களை வரவழைத்து பயன்படுத்தும் அவலமும் அதிகரித்துள்ளது.  
5. டி.வி. முன்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன், சாக்லேட், ஸ்வீட் போன்றவற்றுடன் ஆஜராகி சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், ஏ.சி அறையில் உட்கார்ந்தபடியே சாட்டிங் செய்வதும் இன்றைய பொழுதுபோக்கு. இதனால் உடல் இயக்கம் முற்றிலும் குறைந்து... உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புகளைக் கரைக்க வழியின்றி சேமித்து, ஒபிஸிட்டியை பரிசளிக்கிறது.

உணவைத் தவிர்த்தாலும் ஒபிஸிட்டி!
அதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை 'ஸ்கிப்’ செய்தாலும்கூட.. ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும்.
 இளம் பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், சாதரண நோய் தொடங்கி... குழந்தை பாக்கியம் இல்லாமை வரை பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.  
 பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்குத் தரப்படும் உளுத்தங்களி போன்ற பாரம்பர்ய உணவுகள், ரத்த விருத்திக்கு தேவையான ஊட்டச்சத்தை தரவல்லவை. ஆனால், இன்றைய டீன் ஏஜினரோ... காலை எழுந்தவுடனே பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடவே விரும்புகின்றனர்.

உயரத்துக்கேற்ற எடை அவசியம்..!
ஒருவரின் சரியான எடையைக் கண்டறிய ஓர் எளிய வழி. உயரம் (செ.மீ)  100  = சராசரி எடை (கிலோவில்). அதேபோல், ஒருவரின் பி.எம்.ஐ (BMI-Body mass Index) 24-க்கு மேல் இருந்தால், அவர் 'உடல் பருமன்’ வகையில் சேருவார். அதாவது, ஒருவரின் எடை (கிலோ) / உயரம் (மீ)2 = பி.எம்.ஐ. உதாரணமாக, உங்கள் மகளின் எடை 45 கிலோ, உயரம் 155 செ.மீ என்றால், 45 / (1.55ஜ்1.55) = 18.7. உங்களது மகள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம்.

குறிப்பு: சென்ற தலைமுறையில் செப்பு மற்றும் மண்பானையில் வைத்து தண்ணீர் குடித்தார்கள். அதனால், அதில் உள்ள தாதுப்பொருட்கள் உடலில் சேர்ந்து கருமுட்டை மற்றும் கருப்பை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இன்றோ, பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துவதால்... அதில் உள்ள ஸினோ ஈஸ்ட்ரோஜென்' (Xeno Estrogen) எனும் வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள இயற்கையான ஈஸ்ட்ரோஜென்னை வேலை செய்ய விடாமல் தடுத்து, கருமுட்டை வளர்ச்சியின்றி சினை உறுப்பில் நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்பாகிறது. இதை, பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்' (Polycystic Ovary Disease) என்று சொல்லுவார்கள். இந்த பிசிஓடி, அதிகமான உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குளறுபடிகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தீர்வுகள் என்ன?
 போதிய உணவுக் கட்டுப்பாடு.
 ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், சீரான உடற்பயிற்சியும்.
இளம் பருவத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு களும், கட்டமைக்கும் ஆரோக்கியமுமே வாழ்க்கை முழுவதற்குமான அடிப்படை என்பதால்.. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்களை முற்றிலும் தவிர்த்தல்.
கேழ்வரகு, கம்பு, வரகு, தினை போன்ற தானியங்கள். காய்கறிகள், பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது.
பீன்ஸ், நாட்டு அவரை, காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட், புரோக்கோலி உள்ளிட்ட அதிக நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது.
பூச்சிக்கொல்லி தெளிப்பில்லாத ஆர்கானிக் உணவுகளைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது.
வறுத்த, பொரித்த, எண்ணெய் சார்ந்த உணவுப் பொருட்கள் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது.
வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு இருக்குமாறு அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்வது.
விளையாட்டைவிட சிறந்த மருந்தில்லை என்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, தினமும் விளையாட அனுமதித்தல்... இதுபோன்றவற்றால் உடல் பருமன் பிரச்னையை முற்றிலும்

மூன்றாம் இடத்தில் இந்தியா!

கடந்த ஆண்டு ‘University of Washington Institute for Health Metrics’  வெளியிட்ட புள்ளிவிவரம், உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்.. இது 1980-ம் ஆண்டு வெளிவந்த புள்ளிவிவரத்தைக் காட்டிலும் கற்பனை செய்துகொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது, 80-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகளவில் 857 மில்லியன் (85 கோடியே 70 லட்சம்) மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது கடந்த ஆண்டு நிலவரப்படி 2.1 பில்லியன் (210 கோடி) என்று உயர்ந்துள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகமானோரை தாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது உலக அளவில் அமெரிக்கா (86.9 மில்லியன்), சீனா (62.0 மில்லியன்) இந்த வரிசையில் 40.4 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. அதாவது, 4 கோடியே 4 லட்சம் இந்தியர்கள், உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒல்லி பெல்லி, சரியா... தவறா?
உடல் பருமன் பிரச்னையை மையமாக வைத்து உலகெங்கிலும் கோடிகளில் தொழில் நடக்கிறது. அதிலும், 'உடல் எடையை குறைக்க’ என்று சொல்லி வெளிவந்து கொண்டிருக்கும் பொருட்கள் முன்னிலை வகிக்கின்றன. இதில் நல்லது எது... கெட்டது எது என்பதை வெறும் விளம்பரங்களைப் பார்த்து மட்டுமே வாங்குவது தவறு. குறிப்பாக, மருத்துவரின் ஆலோசனை இன்றி இதுபோன்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது மிக தவறானது. அது நிச்சயம் தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, இன்றைக்கு விற்கப்படும் பொருட்களில் சிலவற்றை பயன்படுத்துவதால் சத்துக்குறைபாடு, விட்டமின் பிரச்னை தொடங்கி, கிட்னி பாதிப்பு வரை பலவித பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மிகமுக்கியமாக, மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை உடல் எடை குறையலாம். அதைவிட அதிகமாகக் குறைந்தால், அது உடலை நம் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு செல்வதோடு, தேவையில்லாத பிரச்னைகளை கொண்டுவந்து சேர்க்கவும் செய்யும்.

தைராய்டு சோதனை!
தைராய்டு டெஸ்ட்டின் அளவு 4ஐ விட அதிகமாக இருந்தால், தைராய்டு குறைவாக சுரக்கிறது, தைராய்டின் அளவு 0.5ஐ விட குறைவாக இருந்தால் தைராய்டு அதிகமாக சுரக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். உடல் எடை அதீதமாக அதிகரிப்பவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். மிகமுக்கியமாக... கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு அதிகமாக சுரந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, பல் வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் என அனைத்துமே பாதிக்கப்படும்.
வெல்லலாம்.

சனி, 20 டிசம்பர், 2014

இது பெண்களுக்கு:மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது இயற்கையான உடலியல் மாற்றம். இது பெண்களுக்கு 50 முதல் 55 வயதில் ஏற்படலாம். இப்போது மெனோபாஸ் 40 வயது முதல் 45 வயதினருக்கும் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை மெனோபாஸ் (அதாவது மாதவிடாய் நிற்பது) என்பது ஓர் இயற்கைச் சுழற்சி. இந்தக் காலத்தில் உடல்நலத்தைக் கூடுதலாகப் பேணுவதற்கு வாய்ப்பாக இது அமையும் என்கிறது. இயற்கையான இந்த நிகழ்வை, சில அறிகுறிகள் மூலம் மிகச் சுலபமாகச் சமாளிக்க முடியும் என்கிறது ஆயுர்வேதம்.
வளத்துக்கு அடித்தளம்
மெனோபாஸ் என்பது ஆயுர்வேதத்தில் ரஜோனிவிருத்தி (மாதவிடாய் நிற்பது) எனப்படுகிறது. இது உயிரியல் ரீதியாக இயல்பாக, முதுமையின் அறிகுறியாகவும் பிள்ளைப்பேறு குறைவதால் பெண்களுக்கு ஏற்படும் மாற்றம். மெனோபாஸ் என்பது இயற்கையின் அறிவிப்பு. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பின்னாளில் நலமாக வாழ அடித்தளம் அமைப்பதாக இருக்கிறது.
பெண்களின் உடலியல் செயல்பாடுகளை மூன்று பருவங்களாகப் பிரிக்கலாம். 1. குழந்தைப் பருவம், 2. நடு வயது – இளம் பருவம், 3. முதுமைப் பருவம். ஆயுர்வேதப் புரிதல்படி குழந்தைப் பருவத்தில் கபம் அதிகமாக ஏற்படும். நடு வயதுப் பருவத்தில் பித்தம் அதிகரிக்கும். முதுமைக் காலத்தில் வாயு எனப்படும் வாதம் ஏற்படும். மாதவிடாய் நிற்பது என்பது இளம் பருவநிலை மாறி முதுமைக்குச் செல்வதைக் குறிக்கிறது, அதாவது பித்த நிலையிலிருந்து வாத நிலைக்கு மாறுவதாகும்.
விளைவுகள்
பெரும்பாலான அறிகுறிகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கலந்ததால் ஏற்படும் தடுமாற்றச் சூழலாக இருக்கும். இதனால் பெண்களின் உடலியலில் (பிரகிருதி) அதிக மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் உடல் ஹார்மோன்கள் பித்தம், கபம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுவதால், இந்தச் சூழலில் பெண்கள் உடல் அதிக வெப்பமாவதை உணர்வார்கள். உடல் எடையும் அதிகரிக்கலாம். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை வாதத்தின் நிலை தடுமாற்றத்தால் தோன்றுவதாகும்.
மெனோபாஸ் அறிகுறிகள்
ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றும், அதேநேரம் ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வகையில் இருக்கும். இது பெண்களின் உடல் வாகுக்கு ஏற்றவாறு, உடலில் உள்ள தோஷங்களுக்கு ஏற்ப அமையும். பொதுவாக உடல் அதிக வெப்பமடைவது, இரவில் அதிகம் வியர்ப்பது, அதிக உதிரப் போக்கு, செயல்பாடுகளில் தடுமாற்றம், பிறப்புறுப்பில் வறட்டுத்தன்மை ஏற்படுவது, தூக்கமின்மை, எரிச்சல், உளைச்சல், எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி, இதயப் படபடப்பு, சோர்வு, மலச்சிக்கல், சிலருக்குச் சிறுநீர் போக்கில் முறையற்ற தன்மை ஆகியவை உண்டாகலாம்.
அசவுகரிய காரணங்கள்
மெனோபாஸ் காலம் என்பது பித்தக் காலச் சுழற்சியிலிருந்து வாதக் காலத்துக்கு மாறுவதாகும். இந்தச் சுழற்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பெண்ணின் உடலில் பித்தமும் வாயுவும் இருந்தால், மெனோபாஸ் சமயத்தில் அவை அதிகரிக்கும். ஹார்மோன், இயற்கையான உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் இப்படி நிகழ்கிறது.
மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் தடுமாற்றம் செரிமானத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக உடலில் ஊட்டச்சத்து சேர்வது தடைபடும். மேலும் இந்தச் செல்கள் உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுபவை. இவை அனைத்தும் மெனோபாஸ் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும். மூன்றாவது முக்கியமான விஷயம் மூளையைத் தவறாக வழிநடத்துவது, கோபம், எரிச்சல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்வது போன்ற செயல்கள் தூண்டப்படும்.
சிகிச்சையின் அவசியம்
மெனோபாஸ் இயற்கையான உடலியல் மாற்றம்தான் என்றாலும், அது நிகழும்போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், தொடர்ந்து தூக்கமின்மை, மூளைச் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படும். இவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின்னாளில் பல நோய்கள் உருவாகலாம். இத்தகைய அறிகுறிகள் உடல் தசைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், எலும்பு, தசை, கொழுப்பு, உடலுறுப்பு, தோல் மற்றும் ரத்தம் உறைவது உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பது ஆயுர்வேதப் புரிதல். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடலில் கழிவுப் பொருள் தங்கினால், அது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த நாளங்களை இப்படி விரிவடையச் செய்வதால் வெப்பம் உருவாகும். இதனால் தசையும் விரிவடையும்.
ஆயுர்வேதச் சிகிச்சை
மெனோபாஸ் சமயத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பது, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தி உடலே அதைக் குணப்படுத்தும் அளவுக்குத் தயார்படுத்துவதாகும். இதற்கு மூன்று வகையான அணுகுமுறைகள் அவசியம்: அவை உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறை. உடலில் உள்ள தோஷங்களைச் சமநிலைபடுத்துவது ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் உண்டு.
இதன் மூலம் மெனோபாஸ் காலச் சுழற்சிக்குப் பிறகு உடலில் உள்ள ஹார்மோன்கள் பழையபடி இயங்க வழிசெய்கிறது. இயற்கை மூலிகைகளான ஷதாவரி, அசோகா, லிகோரைஸ் ஆகியவற்றின் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தாவரங்களில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புக்கு உதவும் மருத்துவக் குணங்கள் உள்ளன.
கழிவு அகற்றச் சிகிச்சை
அத்துடன் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறை, அதிகப்படியான தெம்பை அளிப்பதுடன் பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்கவும் உதவுகிறது. வெளிப்புறச் சிகிச்சை முறையான எண்ணெய்க் குளியல் மூலம் உடலிலுள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஷிரோதரா (முன் நெற்றியில் எண்ணெய் தடவுதல்) மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் உடலின் செயல்பாடுகளைச் சுத்தமாக்குகின்றன. இது உடலுக்குச் சுகத்தை அதிகரிக்கிறது. செரிமானச் சக்தியையும் (அக்னி) அதிகரிக்கச் செய்கிறது. இவை அனைத்தும் மன அழுத்தம் மற்றும் எரிச்சலைப் போக்குகின்றன.
மருத்துவச் சிகிச்சை, ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் லோத்ரா, அசோகா, ஷதாவரி மற்றும் குமாரி ஆகிய இயற்கை மூலிகைகள் மேற்கண்ட உடற்செயல் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகின்றன. மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, அஷ்வசனம் (சிறந்த ஆலோசனை) சிறந்த வழிகாட்டியாக உதவுகிறது.
உணவு
ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள், பால், நெய், சோயா பால், கீரை, கொண்டைக்கடலை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம். பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்க இவை உதவும். சூடான உணவு, பானங்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்ப்பது போன்றவையும் சிறந்தவையே. காபி குடிப்பதைத் தவிர்ப்பது, சர்க்கரை, குளிர்பானங்கள், சாலட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது ஆயுர்வேதம் தரும் பரிந்துரை.
கட்டுரையாளர், 
சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் மருத்துவ அதிகாரி

சனி, 13 டிசம்பர், 2014

குழந்தை பேறுக்கான நல்லுணவு

வீட்ல விசேஷமா? என்றால் தீபாவளி, பொங்கல் என்று அர்த்தமில்லை. மனைவிக்கு மசக்கையா என்று தான் அர்த்தம். அந்த அளவிற்கு, நம் கலாச்சாரத்தில், மகப்பேறுக்கு ஒரு தனி பெருமைக்குரிய இடம் உண்டு. திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே ”இன்னும் தள்ளிப்போகலையா?”, என்ற கேள்வி தாயிடம் இருந்து தவிப்பாய் வருவது இன்டெர்நெட் காலத்திலும் இடம் பெறுவது உண்டு. 

குழந்தைப்பேற்றிற்கான வழி செய்யும் உணவு வகைகளும் உண்டா என்ன? அழகான ஆரோக்கியமான குழந்தைப்பேற்றிற்கு அடுப்பங்கரையும் உதவும் என்றால், நமுட்டுச் சிரிப்புடன், “அட,அங்கேயுமா?” என அவசரமாய்க் கற்பனை செய்ய வேண்டாம். அஞ்சறைப் பெட்டியின் அறிவியல் தம்பதியரின் உடல் நலம் காத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றிட பெரிதும் உதவிடும். எப்படி?

கருத்தரிப்பு ஒரு அற்புதமான நிகழ்வாய்த் தம்பதியரிடம் ஏற்படவேண்டும். முந்தைய தினம் முற்றத்துச் செம்பருத்தி மொட்டு எப்போது மலர்ந்தது எனத் தெரியாமல் அதிகாலையில் ஆச்சரியமாய்க் கண்கள் விரித்து மகிழ்வது போல, கருத்தொத்து, அன்பில் திளைக்கும் அவர்தம் தாம்பத்ய உறவில், கருத்தரிப்பும் நிகழ வேண்டும். அது தான் இயல்பு. இன்பமும் கூட.”காலை பில்” காலாவதியானதாலோ, கணக்குப் பார்த்து கணக்கு பார்த்து, இன்றையிலிருந்து பத்து நாளைக்குச் சேர்ந்தால் சாத்தியப்படுமாமே என ஐ.எஸ்.ஒ.9001 சட்டதிட்டங்களில் குழந்தைக்கு முயல்வதிலோ சிறப்பு இல்லை. மலரினும் மெல்லியது காமம் என்பதை புரிந்து மகிழ்வதில் நிகழும் கருத்தரிப்பிற்கு நிச்சயம் கூடுதல் பொலிவும் பயனும் உண்டு.

திருமணமான புதிதில் தம்பதியர் தத்தம் உறவினரின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்லும் வழக்கம் நகர்ப்புறங்களில் தொலைந்து விட்டது. அந்த விருந்திலேயே துவங்கி விடும் மகப்பேறிற்கான சிறப்பு உணவுத் தேர்வு. தலைவாழையில் துவங்கி கும்பகோணம் வெற்றிலையில் முடியும் அந்த சிறப்புணவின் ஒட்டுமொத்த குறிக்கோள், புதுபெண்ணை மசக்கைக்குத் தள்ளுவது தான்.

கருத்தரிக்கும் அந்த கணத்திலேயே இரத்தத்தில் ஃபோலிக் ஆசிட் எனும் உயிர்சத்து சரியான அளவில் இருப்பது குழந்தைக்கு முதுகுத் தண்டுவட பிரச்னையில்லாமல் இருக்க உதவும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். தாமரை தண்டில் நிறைந்து உள்ளது இந்த ஃபோலிக் அமிலச் சத்து. எள், வெண்டைக்காய், கீரைகள், மாமிச உணவுகளும் ஃபோலிக் சத்து நிறைந்தது தான். இது கருத்தரிக்க விழையும் பெண்மணிகள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது.

பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது. 
மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.




பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ’அகர் அகர்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும். இரத்த்தில் தைராய்டின் அளவு இருப்பதை மட்டும் வைத்து எனக்கு ’ஹைப்போ’ வாக்கும் என்பது தவறு. உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசித்து மருத்துவம் செய்வித்துக் கொள்வது அவசியம். அதிகம் கடுகு, முட்டைகோஸ் எடுப்பதும் தைராய்டு அளவைக் குறைக்கக் கூடும் என்கிறது இன்றைய ஆய்வுகள்.

கீரைகள்- குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவு. தினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதில் சோம்பல் வேண்டவே வேண்டாம். குறிப்பாய் பசலை,முருங்கை, அரைக் கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவ பாட்ல் கூருகிறது. மகவிற்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.

ஆண்களின் விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருத்தல், அமைப்பு சரியாக இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதித்தால், உணவில் அதிக முளைகட்டிய பயறு வகைகளும், இலவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும். தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப்பருப்பு, இவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்க கண்டிப்பாக உதவிடும். போகம் விளைவிக்கும் கீரைகள் என சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவேளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றை கண்டிப்பாய்ச் சமைத்து சாப்பிட வேண்டும்.

புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவிற்கு விந்து அணுக்களை அதிகரிக்கவும் இதன் இயக்கத்தை கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கிறது இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.
கூடியவரை வீட்டில் தயாரித்த, எண்ணெய் சத்து அதிகமில்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முதலிடம் கொடுங்கள். ரெடிமேட் உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. குழந்தைப்பேறு நெடு நாளாகத் தள்ளிப் போகும் மகளிர், கொத்துமல்லி கீரை 2ஸ்பூன் அளவில்,1/4 ஸ்பூன் அளவில் வெந்தயம் சேர்த்து இளங்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.



மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் விஷயமல்ல கருத்தரிப்பு என்பது. யாகம் வளர்த்து ராமன் பிறக்கும் வித்தையும் இப்போதில்லை. சரியான உணவு, ஏதும் குறையிருப்பின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை எல்லாவற்றிற்கும் மேலாக சந்தோஷமான மனநிலை மற்றும் குடும்பச்சூழல், தேவைக்கேற்ற தனிமையும், நாளை நானும் நிச்சயம் தாய்மையடைவேன் எனும் நல்ல நம்பிக்கை இவையும் தேவை. இவை இருந்தாலே இயல்பாய் அது நிகழும். மகிழ்ச்சியும் மலரும்!

வெள்ளி, 27 ஜனவரி, 2012

சினைப்பை நீர்கட்டி…

சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.

இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.

பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.

இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரம்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும் . எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. ஊகுஏ எனும் ஹார்மோன் குறைந்து காணும். ஃஏ எனும் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.

டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.

புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.

மாதவிடாய் கோளாறுகள்

ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது.

0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.

இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். ஆMஐ > 30டுஞ்/ஞிட்2 ஆக இருக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.

மலட்டுத் தன்மை

சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முடி வளர்ச்சி

பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.

குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன்கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.

தோலில் காணப்படும் மாற்றங்கள்

உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.

பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.

ஆய்வுகூடத் தேர்வுகள்

ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

உடல் எடையை குறைத்தல்

தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.

நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சீராக

சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.

புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும். புகைப் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.

முடிகளை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கிறது. சவரம் செய்தல், பிளீச்சிங் செய்தல், வாக்சிங் செய்தல் போன்ற முறைகளை கையாளுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டியது அவசியம். எலக்ரோலைசிஸ் மற்றும் லேசர் முறையில் தற்போது முடிகளை சிறப்பாக நீக்குகின்றனர். ஆனால் செலவு அதிகம்.

தகுந்த சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது இன்றியமையாத தாகும்.

திங்கள், 24 ஜனவரி, 2011

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்!!!

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

சனி, 8 ஜனவரி, 2011

கருவுற்ற பெண்ணுக்கு...

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் (Maternal Serum Screening)

கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் (First Trimester Screening) சோதனையும், 15-21 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் (Triple Screening test) சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் (Carrier Screening) சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.

திங்கள், 27 டிசம்பர், 2010

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.

7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிரில் போட்டு கலக்கி கொள்ளுங்கள்.இதே அடுப்பில் வைத்து அரை டம்ளர் அளவு ஆகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு இறக்கி,வடிகட்டி,ஆறவைத்து குறிப்பிட்ட அந்த மூன்று நாட்களுக்கு அதிக்காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு அந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.இதனால் மாதவிலக்கு சம்பத்தபட்ட சகல கோளாறுகளும் நிங்கும்

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About