top ads

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

பனிக்காலத்தில் நோயில்லாதிருக்க உணவும் வாழ்வும்

‘மாதங்களில் அவள் மார்கழி’என்று கவிஞர் கொஞ்சும் மாதம் மார்கழி. முன்பனிக்காலம் என்று பழம் இலக்கியங்கள் வகைப்படுத்தியுள்ளது மார்கழியையும் தையையும் தான்.  “கொண்டல் காற்று வீசும்; ஆந்தை மகிழும்; செந்நெல் விளையும்; செங்கரும்பு முதிரும்;” என்று நம் முன்னோர் முன்பனிக்காலத்தைப் பற்றி பாடியது, சாட்டிலைட் இல்லாமல், அணுமின் அவசியப்படாமல், முழுமையாய்த் தம் நுண்ணறிவின் ஆழமான பார்வையாலும் அலசலாலும் தான்.

சூரியன் கொஞ்சம் தள்ளிச் சுற்றுகிறது..கூடுதல் குளிர் இருக்கும். உடலை வெம்மையாய் வைத்திருப்பதன் மூலம் முன்பனிக்காலத்து நோய்க் கூட்டத்தை வராது தடுக்கலாம் என நம் முன்னோர்கள் சித்த மருத்துவ இலக்கியங்களில் எடுத்துச் சொன்னது, இக்கால நவீன  epidemiologists சொல்லும் கருத்துக்கு சளைத்தவை அல்ல. இந்தப் பருவத்தில், இந்த வகையான நிலத்தில் வாழும் மக்கள் இவ்வகையான உணவைச் சப்பிட்டு, இவ்வகையான வாழ்வியலைப் பின்பற்றினால் நோயின்றி வாழலாம் என அவர்கள் சொன்னது 2000 வருடங்களுக்கு முன்பு.

 “நோ? மம்மி! - நியூசிலாந்து சீஸ் தடவிய இட்டாலியன் பிட்சாவும், இங்கலீஷ் பிரட்டும் தான் ஹெல்த்தி..ஓட்ஸ் கஞ்சி வேண்டுமானால் சேர்த்துக்கிறேன்,” என மேற்கத்திய  ‘நொர்நாட்டியம்’ பிடிக்கும் நம்ம ஊர் மெத்தப் படித்த மேதாவிகள், இதனை ஒதுக்கியதில் மருந்துக் கம்பெனியும் அவர்தம் அடிப்பொடி ஆழ்வார்களாய் மருத்துவர்களும் செழிக்கிறார்கள். கொழிக்கிறார்கள்.

பனிக்கு கம்பளி ஸ்வொட்டர் போடச் சொன்னது முதல், கோதுமை முதலான சூட்டைத் தரும் உணவைச் சாப்பிடச் சொன்னது வரை பனிக்கால பிரிஸ்கிரிப்ஷன் அன்றே உண்டு. மாலை நேரத்தில்தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இளங்காலைக் குளிர் தவிர்க்கப்பட வேண்டும். தினசரி உடலில் வியர்வை கசியும்படி உடலுழைப்பாய் ஒரு செயலை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும்  நம் முன்னோர் மார்கழியில் செய்யச் சொன்ன நலவாழ்வுச் சூத்திரங்கள்.

முன்பனிக்கால மார்கழியில் இரைப்பு எனும் வீசிங்(ஆஸ்துமா), மூக்கடைப்பு, தும்மல், மூட்டுவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தலைகாட்டும். தோல்வறட்சியால் அப்பா ஒருவழியா ஒழிஞ்சிடுச்சு என நினைத்திருந்த சோரியாஸிஸ், கரப்பான்(எக்ஸிமா).. மீண்டும் தலைக்காட்டும்.

 பனிக்காலத்தில் ஏதும் நல்லதில்லையா? என்று கேட்டால், மார்கழி காதல் செய்யும் நேரம்.(அது தான் கவிஞர்கள் மார்கழியை மறப்பதில்லை போலும்!). இனிப்பு சாப்பிட உகந்த நேரம்( ஹலோ! ட்யாபடிக் சித்தப்பா..வீசிங் வரும் தங்கச்சி.. நீங்க உங்கள் மொழியில் விழியில் மட்டும் இனிப்பு வச்சுக்கோங்க..சாப்பிடக்  கூடாது)

பலமுறை மிளகைப் பற்றி எழுதியதில் ஒருமுறை, நண்பர் ஒருவர் “சார்! மிளகுத் தோட்டம் வச்சிருக்கார்னு நினைக்கிறேன்: எப்பப் பார்த்தாலும் மிளகைச் சாப்பிடச் சொல்லி அடம்பிடிக்கிறார்”, என்று. உண்மையில் ஆம்லெட், வெண்பொங்கலில் மிளகைப் பார்க்கிறது தவிர மிளகு எஸ்டேட் பக்கம் டூருக்குக் கூட சென்றதில்லை. ஆனால் மிளகு குறித்து படிக்க படிக்க அதன் ஆய்வு முடிவுகள் எல்லாவர்றையும் பார்க்கபார்க்க மிளகு மருந்திலும் சரி, உணவிலும் சரி  ‘பாக்ஸ் ஆஃபிஸ் கெட்டி!  ‘மிளகுக்கு’ இப்போது இத்தனை பில்ட் அப் கொடுப்பது கூட மார்கழி மாதத்தில் மிளகை நீங்கள் மறக்கவே கூடாது என்பதால்தான். குளிர் காலத்தில் உடலுக்கு அதிக வெம்மை தேவைப்படும். அதைத் தரும் மிளகு பனிகால சளிக்கும் முதல் மருந்து.ஆஸ்துமா நோயாளிகளுக்கு நவீன மருந்தில் முதல் தேர்வாக்க் கொடுக்கப்படுவது தியோஃபிலீன்; டெரிஃபிலீன் மருந்துகள்..அம்மருந்தின் வேகத்தை அதிகப்படுத்தவும் உடலில் அதன் செயல் திறனை ஊக்குவிக்கவும் மிளகு பெரும் பயன் தருகிறது என்கிறது தற்போதைய ஆய்வுகள். 

 நிறைய சித்த மருந்துகளில் மிளகு சேர்க்கப்படுவது கூட அதன் தனிப்பயனுடன், உடன் சேர்க்கப்படும், பிற மூலிகைகளின் செயல் திறனைக் கூட்டத்தானோ என்ற எண்ணமும் இப்போது மேலோங்குகிறது. என்வே மார்கழிப் பொங்கல் மட்டுமல்ல, ஆம்லெட், அடை- அவையல் என எதில் வேண்டுமானாலும் மிளகை கூடுதல் போடுங்கள்.
பீர்க்கு, பூசணி, சுரை போன்ற நீர்க்காய்கறி அதிகம் வேண்டாம். உளூந்து குளிர்ச்சிதான் என்றாலும், பனிக்காலத்தில் உடல் உறுதி தரப்பயன்படும் என்கிறது தமிழ் மருத்துவம். மற்ற நேரத்தில் அதிகம் நல்லதில்லாத, இனிப்பு. புளிப்பு, உவர்ப்பு சுவை உள்ள உணவுகள் பனிக்காலத்தில் நல்லது.. மார்கழியில் அதிகாலை பசி கிள்ளும். அதனால் தான் என்னவோ மார்கழிக் காலையில் இறைவழிபாடும் அதிகாலை மிளகுப்பொங்கலும் வாழ்வியலாய்ச் சொல்லப்பட்டது போலும். பனைவெல்லம் பனங்கற்கண்டு சேர்த்த இனிப்பு பண்டங்களும், உப்பேறி (நாகர்கோயில் மக்களைக் கேளுங்கள்..அவர்கள் ஊர் ஸ்பெஷாலிடி இனிப்பு அது), வெல்ல பனியாரம், அதிரசம் போன்றவையும் மார்கழி மாச உடலுறுதிப்படுத்தும் இனிப்புகள்.(அளவோடு சாப்பிட்டால்)

பனிக்காலத்தில் தைலப்பூச்சை ஒரு முக்கிய வழக்கமாக சித்த மருத்துவ நூற்கள் அறிவுறுத்துகின்றன. உடற்சூட்டைத் தக்க வைக்கவும், மூட்டு நரம்புகள் வலுவை தக்க வைக்கவும் இப்பூச்சு உதவிடும். குறிப்பாக எலும்புத் தேய்வினால், அல்லது ருமட்டாய்டு எனும் இரத்தத்தில் ஆர்.ஏ. பொருள் இருப்பதால் வரும் மூட்டுவலிகள், இப்பனிக்காலத்தில் அதிகம் வலி தரும். மூலிகைத் தைல எண்ணெய்களை அருகிலுள்ள சித்தமருத்துவர்களை அணுகிப் பெற்று, அத்தைலத்தை இளஞ்சூடாக்கி(அதிக சூடாகிவிட்டால் எண்ணெய்க் கொப்புளம் ஏற்பட்டு விடும்), நன்கு அழுத்த மூட்டுகளில் தேய்க்க வேண்டும்.முன்பெல்லாம்,  ‘தைலம் தேய்ப்பதால் என்ன வந்துவிடபோகிறது?’, என சண்டைக்கு வந்த நவீன மருத்துவ நண்பர்கள், தற்போது ஆய்வு செய்து, எண்ணெய் தேய்ப்பு,  lymphatic drainage- ஐ விரைவுபடுத்திகிறது.  Macropahageபணி வேகமாக நடைபெற்று வீக்க குறைப்பு (REDUCTION OF INFLAMMATION)நிகழ்கிறது, என பன்னாட்டு உயர் மருத்துவ ஏடுகளில் எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள்.

சோரியாஸிஸ், கரப்பான் போன்ற நோயுள்ளோர் நோய் நீங்கி இருந்தாலும் உடலுக்கு மருத்துவர் சொல்லும் தைலத்தை தோலில் தடவி வருவது மிக அவசியம். அது நோய் மீண்டும் தலைகாட்டாமல் இருக்க உதவிடும். மார்கழியில் குழந்தைகளுக்கு மறக்காமல் இரவில் கற்பூராதி தைலம்( தேங்காய் எண்ணையை சூடாக்கி கற்பூரம் கலந்து வைப்பது-கடைகளிலும் கிடைக்கும்) மார்பில் தேய்ப்பது சளி பிடிக்காமலிருக்க உதவும்.

 இரவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்த பால் சேர்ப்பது, மதியம் தூதுவளை ரசம் சாப்பிடுவது, மாலையில் அவ்வப்போது கொள்ளு சுண்டல் சாப்பிடுவது உடலை சூடாக வைத்திருந்து நோய் விரட்ட உதவும். குளிக்க, குடிக்க வெந்நீர் பயன்படுத்துவது,  நொச்சி தழை போட்டு ஆவிபிடிப்பது போன்ற வாழ்வியல் வழக்கங்களையும் வீட்டில் செய்வது மார்கழியில் நல்லது.

Tks

Dr.SIVARAMAN Siddha

சனி, 20 டிசம்பர், 2014

இது பெண்களுக்கு:மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது இயற்கையான உடலியல் மாற்றம். இது பெண்களுக்கு 50 முதல் 55 வயதில் ஏற்படலாம். இப்போது மெனோபாஸ் 40 வயது முதல் 45 வயதினருக்கும் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை மெனோபாஸ் (அதாவது மாதவிடாய் நிற்பது) என்பது ஓர் இயற்கைச் சுழற்சி. இந்தக் காலத்தில் உடல்நலத்தைக் கூடுதலாகப் பேணுவதற்கு வாய்ப்பாக இது அமையும் என்கிறது. இயற்கையான இந்த நிகழ்வை, சில அறிகுறிகள் மூலம் மிகச் சுலபமாகச் சமாளிக்க முடியும் என்கிறது ஆயுர்வேதம்.
வளத்துக்கு அடித்தளம்
மெனோபாஸ் என்பது ஆயுர்வேதத்தில் ரஜோனிவிருத்தி (மாதவிடாய் நிற்பது) எனப்படுகிறது. இது உயிரியல் ரீதியாக இயல்பாக, முதுமையின் அறிகுறியாகவும் பிள்ளைப்பேறு குறைவதால் பெண்களுக்கு ஏற்படும் மாற்றம். மெனோபாஸ் என்பது இயற்கையின் அறிவிப்பு. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பின்னாளில் நலமாக வாழ அடித்தளம் அமைப்பதாக இருக்கிறது.
பெண்களின் உடலியல் செயல்பாடுகளை மூன்று பருவங்களாகப் பிரிக்கலாம். 1. குழந்தைப் பருவம், 2. நடு வயது – இளம் பருவம், 3. முதுமைப் பருவம். ஆயுர்வேதப் புரிதல்படி குழந்தைப் பருவத்தில் கபம் அதிகமாக ஏற்படும். நடு வயதுப் பருவத்தில் பித்தம் அதிகரிக்கும். முதுமைக் காலத்தில் வாயு எனப்படும் வாதம் ஏற்படும். மாதவிடாய் நிற்பது என்பது இளம் பருவநிலை மாறி முதுமைக்குச் செல்வதைக் குறிக்கிறது, அதாவது பித்த நிலையிலிருந்து வாத நிலைக்கு மாறுவதாகும்.
விளைவுகள்
பெரும்பாலான அறிகுறிகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கலந்ததால் ஏற்படும் தடுமாற்றச் சூழலாக இருக்கும். இதனால் பெண்களின் உடலியலில் (பிரகிருதி) அதிக மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் உடல் ஹார்மோன்கள் பித்தம், கபம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுவதால், இந்தச் சூழலில் பெண்கள் உடல் அதிக வெப்பமாவதை உணர்வார்கள். உடல் எடையும் அதிகரிக்கலாம். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை வாதத்தின் நிலை தடுமாற்றத்தால் தோன்றுவதாகும்.
மெனோபாஸ் அறிகுறிகள்
ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றும், அதேநேரம் ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வகையில் இருக்கும். இது பெண்களின் உடல் வாகுக்கு ஏற்றவாறு, உடலில் உள்ள தோஷங்களுக்கு ஏற்ப அமையும். பொதுவாக உடல் அதிக வெப்பமடைவது, இரவில் அதிகம் வியர்ப்பது, அதிக உதிரப் போக்கு, செயல்பாடுகளில் தடுமாற்றம், பிறப்புறுப்பில் வறட்டுத்தன்மை ஏற்படுவது, தூக்கமின்மை, எரிச்சல், உளைச்சல், எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி, இதயப் படபடப்பு, சோர்வு, மலச்சிக்கல், சிலருக்குச் சிறுநீர் போக்கில் முறையற்ற தன்மை ஆகியவை உண்டாகலாம்.
அசவுகரிய காரணங்கள்
மெனோபாஸ் காலம் என்பது பித்தக் காலச் சுழற்சியிலிருந்து வாதக் காலத்துக்கு மாறுவதாகும். இந்தச் சுழற்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பெண்ணின் உடலில் பித்தமும் வாயுவும் இருந்தால், மெனோபாஸ் சமயத்தில் அவை அதிகரிக்கும். ஹார்மோன், இயற்கையான உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் இப்படி நிகழ்கிறது.
மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் தடுமாற்றம் செரிமானத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக உடலில் ஊட்டச்சத்து சேர்வது தடைபடும். மேலும் இந்தச் செல்கள் உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுபவை. இவை அனைத்தும் மெனோபாஸ் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும். மூன்றாவது முக்கியமான விஷயம் மூளையைத் தவறாக வழிநடத்துவது, கோபம், எரிச்சல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்வது போன்ற செயல்கள் தூண்டப்படும்.
சிகிச்சையின் அவசியம்
மெனோபாஸ் இயற்கையான உடலியல் மாற்றம்தான் என்றாலும், அது நிகழும்போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், தொடர்ந்து தூக்கமின்மை, மூளைச் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படும். இவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின்னாளில் பல நோய்கள் உருவாகலாம். இத்தகைய அறிகுறிகள் உடல் தசைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், எலும்பு, தசை, கொழுப்பு, உடலுறுப்பு, தோல் மற்றும் ரத்தம் உறைவது உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பது ஆயுர்வேதப் புரிதல். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடலில் கழிவுப் பொருள் தங்கினால், அது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த நாளங்களை இப்படி விரிவடையச் செய்வதால் வெப்பம் உருவாகும். இதனால் தசையும் விரிவடையும்.
ஆயுர்வேதச் சிகிச்சை
மெனோபாஸ் சமயத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பது, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தி உடலே அதைக் குணப்படுத்தும் அளவுக்குத் தயார்படுத்துவதாகும். இதற்கு மூன்று வகையான அணுகுமுறைகள் அவசியம்: அவை உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறை. உடலில் உள்ள தோஷங்களைச் சமநிலைபடுத்துவது ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் உண்டு.
இதன் மூலம் மெனோபாஸ் காலச் சுழற்சிக்குப் பிறகு உடலில் உள்ள ஹார்மோன்கள் பழையபடி இயங்க வழிசெய்கிறது. இயற்கை மூலிகைகளான ஷதாவரி, அசோகா, லிகோரைஸ் ஆகியவற்றின் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தாவரங்களில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புக்கு உதவும் மருத்துவக் குணங்கள் உள்ளன.
கழிவு அகற்றச் சிகிச்சை
அத்துடன் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறை, அதிகப்படியான தெம்பை அளிப்பதுடன் பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்கவும் உதவுகிறது. வெளிப்புறச் சிகிச்சை முறையான எண்ணெய்க் குளியல் மூலம் உடலிலுள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஷிரோதரா (முன் நெற்றியில் எண்ணெய் தடவுதல்) மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் உடலின் செயல்பாடுகளைச் சுத்தமாக்குகின்றன. இது உடலுக்குச் சுகத்தை அதிகரிக்கிறது. செரிமானச் சக்தியையும் (அக்னி) அதிகரிக்கச் செய்கிறது. இவை அனைத்தும் மன அழுத்தம் மற்றும் எரிச்சலைப் போக்குகின்றன.
மருத்துவச் சிகிச்சை, ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் லோத்ரா, அசோகா, ஷதாவரி மற்றும் குமாரி ஆகிய இயற்கை மூலிகைகள் மேற்கண்ட உடற்செயல் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகின்றன. மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, அஷ்வசனம் (சிறந்த ஆலோசனை) சிறந்த வழிகாட்டியாக உதவுகிறது.
உணவு
ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள், பால், நெய், சோயா பால், கீரை, கொண்டைக்கடலை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம். பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்க இவை உதவும். சூடான உணவு, பானங்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்ப்பது போன்றவையும் சிறந்தவையே. காபி குடிப்பதைத் தவிர்ப்பது, சர்க்கரை, குளிர்பானங்கள், சாலட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது ஆயுர்வேதம் தரும் பரிந்துரை.
கட்டுரையாளர், 
சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் மருத்துவ அதிகாரி

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About