குடும்ப அமைப்பு என்பது மனித வாழ்வின் பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல். கிட்ட்த்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இனக்குழுக்களாக (ஒரு கூட்டமாக அல்லது மனித மந்தையாக) திரிந்தோம். பின் இனக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெற்றி பெற்ற கூட்டமும் அதன் தலைவனும், தான் சேர்த்த பொருளும் உடைமையும் தனக்கும் தன் மகனுக்கும் மட்டும் இருக்க வேண்டும் என்ற சிந்தனை வலுவாக எழுந்தது. அப்போது தான், பெண்ணை குழு வாழ்க்கையில் இருந்து விலக்கி, தன்னுடைமையாக்கி, தன் மகவைச் சுமப்பதில் இருந்து அந்த குழந்தைய ஆளாக்கும் பொறுப்பையும், தன்னையும் தன் குடுமபத்தையும் காக்கும் பொறுப்பையும் அவளுள் திணித்தான். அப்போதிலிருந்து அடுப்பங்கறைக்கும் படுக்கையறைக்கும் பந்தாடப்படும் பெண்களில் பலர் நிலைமை இன்றைக்கு வரைக்கும் பெரிதாய் மாறவில்லை.
அதன்பின் கொஞ்சமாய் நடந்த மாற்றமும், அதன் நீட்சியாய் நிகழும் தற்போதைய வணிகக் கலாச்சாரமும், நம் மரபுகளின் தளைகளை உடைப்பதற்குப் பதிலாக, அதனுள் களைகளை கவனமாக நட்டுவருகிறது. சார் சார்..உணவே மருந்துன்னு எழுதச் சொன்னால், பெண்ணியம் பன்னாட்டியம்-னு எதேதா பேச ஆரம்பிச்சிட்டீங்களேன்னு மண்டையக் கசக்க வேண்டாம். வரலாறு தெரியாமல் வாழ்வை நாம் நகர்த்தப் பழகியதால் தான் புதிய சிந்தனை, புதிய படைப்பு, ஏன் புதிய ரெசிபி எதுவும் பெரிதாய்ப் பயனுள்ளதாய் பிறக்க மாட்டேங்கிறது.
“காலையில் கொஞ்சம் அதிகமாய் தும்முகிறார்; பிர்த்டே கிரீட்டிங்க்ஸ் எஸ்எம்எஸ்-கவித்துவமாகவே இல்ல..அதனால விவாகரத்துக்கு போறோம்,”-னு சொல்ற புதுமணத் தம்பதிகள் இன்று ஏராளம். ‘குடும்ப கோர்ட்டுக்கள் கூடுதல் நேரம் வேலைசெய்ய வேண்டும்; ஃபைல்கள் குவிகின்றன’ என உச்ச நீதி மன்றம் போன வாரம் கூவிச் சொன்னதுக்கு இணையதள ஃபேஸ்புக்கில், “ஏனிந்த கொலவெறி”- தமிழ் வெண்பாவிற்கு அப்புறம் கூடுதல் “லைக்”- ஓட்டு விழுந்திருக்கிறது. இனக்குழுக்களில் இருந்து பிரித்து ஆளப்பட்ட பெண், இன்று குடும்பக்குழுவில் இருந்து கூட்டமாய் வெளியேற ஆயத்தமாவது போல் உள்ளது சமீபத்திய திருமண முறிவு புள்ளிவிபரங்கள்.
சரி! திருமண பந்தத்தை ஃபெவிகால் போட்டு ஒட்டிவைக்க சிறப்பு உணவுகள், மூலிகை ரெசிபிகள் இருக்கிறதா என்று கேட்டால், உண்டு..ஆனால் அவை ரெடிமேட் இல்லை. கஸ்டம் மேட்.. கிச்சனில் துவங்கும் காதல், இடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கிளுகிளுப்பாகி, இரவில் இதமான தாம்பத்யமாகும் வித்தைக்கு நீங்கள்தான் கூடுதல் மெனக்கெட்டு, அக்கறைப்பட்டு சமைத்து, அலங்கரித்து, அழகாய்ப் பரிமாறி, உடன் உட்கார்ந்துச் சாப்பிட்டு, சமைத்ததைப் பாராட்டி, அவ்வப்போது “அன்றைக்கு செஞ்சியே கோதுமை ரவா இட்லி..சூப்பர்” என்பது போல் அங்கீகரித்திருக்க வேண்டும். பார்த்தவுடன் பலருக்கு பற்றிக்கொண்டு வரும் உப்புமா கூட இந்த ஃபார்முலாவில் இருந்தால் தாம்பத்ய வாழ்விற்கான சிறப்புணவாயிருக்கும். சரி இனி விஷயத்திற்கு வருவோம்.
ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு வலியை வைத்துக் கொண்டு ரொமான்ஸ் பண்ணுவது கஷ்டம். மலச்சிக்கலுடன் இருந்து கொண்டு எப்படி கனிவாய்க் காதல் பார்வை பார்க்க முடியும்? அப்படியே ட்ரை பண்ணிணாலும் “ஏன் இப்படி முறைக்கிறீங்க?..ன்னு,” யுத்தம் துவங்கலாம். ஆதலினால் காதல் செய்வீர் அடிப்படை ஆரோக்கியத்துடன்.
சோர்வில்லாத முகம் உடல் தாம்பத்ய வாழ்வின் அடித்தளம். நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த மாதிரியே எப்பவும் “லுக்”-கோடு இருக்கும் துணையைப் பார்த்தால் காதலாய் இராது. பாவமாய்த் தான் இருக்கும். எப்போதும் புத்துணர்வாய் இருக்க தினசரி ஒரு வேளை பழங்கள் எடுப்பது மிக மிக அவசியம். ஒருவேளை தைராய்டு இருந்தால் குணப்படுத்த வேண்டும். சர்க்கரை கட்டுக்குள் இல்லையென்றால் அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது சோர்வு மறையும்.
பழங்களில் குறிப்பாக மாதுளை காதல் பெருக்கும் ஒரு கனி என சீனமருத்துவமும் நவீன தாவரவியலாளர்களும் பலகாலமாய்ச் சொல்லி வருகிறார்கள். கொஞ்சம் கூடுதல் விலை என்றாலும் மாதுளை மரத்தில் விளையும் வயாகரா. காய்ந்த திராட்சை(கிஸ்மிஸ்), ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு கொய்யா இவையெல்லாம் உடலையும் மனதுக்குமான ’கெமிஸ்ட்ரி’டீச்சர்ஸ். இனி ஆஸ்பத்திரிக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் பழம் வாங்கிச் சென்று பழகுங்கள். உடல் வியாதி மட்டுமல்ல மன வியாதியும் போய்விடும்.
காமம் பெருக்கும் கீரைகள் என்று, சிறு கீரை, முருங்கைக்கீரை, தூதுவளைக் கீரை என ஒரு பட்டியலையே சித்த மருத்துவம் சொல்லியிருக்கிறது. இனி கிள்ளுக்கீரை என அலட்சியமாக கீரையைப் பார்க்காமல், கீரையை நரம்பு டானிக்காக பாருங்கள். கீரையில் பொதிந்துள்ள கனிமங்களும், உப்புக்களும் பல நரம்பு பலப்படுத்தும் சத்துக்களும் வேறு தாவரங்களில் குறைவு. சின்ன குழந்தைகளாய் இருக்கும் போதே கீரையை விரும்பி உண்ணும் பழக்கத்தை உண்டாக்குங்கள்.. கீரை மட்டும் பிடிக்காது எனச் சொல்லும் இளைஞர்-யுவதி கூட்டம் பெருகி வருகிறது. பின்னாளில் அவர்கள் நரம்பு டாக்டரையோ, கரு உருவாக்க உதவி செய்யும் கம்பெனிகளையோ நாடாமல் இருக்க அந்த கீரைகள் உதவிடும். பாலி சிஸ்டிக் ஓவரி கூடி வருவதற்கும் “கீரை சாப்பிடமாட்டேங்”கிற பிள்ளையின் பிடிவாதமும், “செல்லத்துக்கு நூடுல்ஸ் தரவா?” எனும் அம்மாவின் அலட்சியமும் தான் ஒரு முக்கிய காரணம். ஹை கிளைசிமிக் தன்மையுடைய உணவை கீரை லோ - கிளைசிமிக் ஆக்கும். அதன் ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிடார்ஸ் சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை வேகமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.
கருத்தரிக்க தயாராக இருக்கும் புதுமணப்பெண் ஃபோலிக் அமில விட்டமின் சத்து எடுத்துக் கொள்வது அவசியம். கீரைகள், வெண்டைக்காய் மாமிச உணவுகளில் ஃபோலிக் அமில சத்து இடைக்கும். ஆண்கள் பாதாம், சாரைப்பருப்பு கலந்த பசும்பால் அருந்துவதும்., முடிந்தால் ½சிட்டிகை அதில் சாதிக்காய் போட்டு அருந்துவது நலம். (ஒரு சிலருக்கு சாதிக்க்காய் மலச்சிக்கல் தரக்கூடும்..அவர்கள் அதனைத் தவிர்க்கலாம்). இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது கூட தாம்பத்ய வாழ்விற்கு உதவிடும். அதன் பொட்டாசிய சத்தும் டெஸ்டோஸ்டீரோனை தூண்டும் சத்துக்களும் அதற்கு சான்றளிக்கின்றன. மாதவிடாய் சீராக இல்லாத இளம்பெண்கள், உணவில் தொலிஉளுந்து, சோயா, வெந்தயம், பூண்டு இவற்றை எடுப்பதும், வாய்ப்பிருப்பின் கற்றாழைச் சாறு ஜூஸ் சாப்பிடுவதும் அவர்கள் தாம்பத்ய வாழ்விற்கும் கருத்தரிப்பிற்கும் நல்லது.
காய்கறிகளில் முருங்கைக்கு முதலிடம். பாக்யராஜ் பரிந்துரைத்ததாலல்ல. மருத்துவ உலகமும் வரிந்து கட்டிக் கொண்டு முருங்கையின் கீரை காய், விதை க்கு ஆண்களின் விந்தணுக்களைக் கூட்டும் சக்தியுண்டு என்பதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு வெண்பூசணி, இருவருக்குமே வெண்டைக்காய், டபுள் பீன்ஸ், சுரைக்காய், கேரட், பீட்ரூட், சிகப்பு பொன்னாங்காணி கீரை, திருமண வாழ்விற்கான அவசியமான காய்கறிகள்.
ஸ்ட்ராபெர்ரியை வாங்கி சாக்லேட் சாஸில் முக்கி, சந்தனப் பேழையில் தந்தாலும், கொடுப்பவர் முகமலர்ச்சியும், வாங்குபவர் அகமகிழ்வும்தான் தாம்பத்யம் தூண்டும். அதற்கு உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் குதூகலமாகவும் இருப்பது மிக மிக அவசியம். 7 நட்சத்திர விடுதி விருந்தை விட, மொட்டைமாடி நிலவொளியில் பரிமாறப்படும் கம்பங்கூழ் “ஒஸ்தி”!