top ads

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வாயுத் தொல்லை இனி இல்லை


“சரியாக நெஞ்செலும்பிற்குக் கீழே ஒருவித எரிச்சலுடன் கூடிய வலி மாரை அடைப்பது போன்ற உணர்வுடன் வருகிறது. நெஞ்செரிச்சலும் இருந்து கொண்டே இருக்கிறது. இது மாரடைப்பா? அல்லது குடற்புண் தரும் அல்சர் வலியா? ரொம்ப குழப்பமா இருக்கிறதே!”, இன்றைக்கு உடல் நல அக்கறை உள்ள நடுத்தர வயதினர் பலரும் பயப்படும் ஒரு பிரச்சினை. ‘சாதாரண வாயுத் தொல்லைதான்,’ என கோலிசோடா கூட்டுப்பெருங்காயம் என சாப்பிட்டு, தடாலடியாக வலியின் தீவிரம் கூடி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாசலுக்குச் செல்வோரும் உண்டு. 

உருளைக்கிழங்கு போண்டாவுடன் இரவு ரிசப்ஷனில் ஒரு கட்டு கட்டி விட்டு, ஏப்பம் வரும் போதெல்லாம் ஜகல்பந்தியாய் சாம்பாரும் சக்கரைப்பொங்கலும் தொண்டைவரை எட்டிப் பார்த்து அலுத்துப்போய், மாரை அடைக்கும் படியாய் நிற்க,”டேய்,பகவான் கூப்பிடறார்னு நினைக்கிறேன்,”-னு கலவரப்பட்டு, நட்சத்திர ஆஸ்பத்திரியை நோக்கி நடு இரவில் ஓடுவர். அங்கோ, “எதுக்கும் இருக்கட்டும்” என ஆரம்பித்து ஈசிஜி, எக்கோ, என்ஸைம் டெஸ்ட் எனத் துவங்கி ஐசியுவில் அடைக்கலம் தர, கடைசியில் ஒரு ’சின்ன சிம்பொனி ஏப்பம்’ வந்ததும் எல்லாம் சுபமாக, அட! ஒண்ணுமில்லாததுக்கு இவ்வளவா? என ஆஸ்பத்திரியைப் பழிக்க….இது இன்று பலர் வீட்டிலும் நடக்கும் பகீர் சம்பவம். ” படுத்திறது எல்லாம் வாயுவா? மாரடைப்பா? எப்படி எதிர்கொள்வது?”

நமது சீரணம் உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கும். வாழை இலையில் இனிப்பைப் பார்த்ததும் வாயில் உமிழ்நீர் சுரப்பது முதல் துவங்கும் இச்சீரணம் சரியாக நடக்க பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். 
நினைத்தபோது நினைத்தவற்றை, நினைத்தபடி சாப்பிட ஆரம்ப்பிக்கும் போது இந்த மொத்த சீரண நிகழ்வுகளும் தடம் பிறழத் துவங்குகிறது.

நல்ல ஆரோக்கியமான உடலுக்கு, இருநேரம் சிற்றுண்டியும் ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. அந்த இரு சிற்றுண்டியிலும் ஒரு வேளை (காலை அல்லது இரவு) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.
காலை வேளை உணவைப் பெரும்பாலோர் தவிர்ப்பதோ அல்லது அக்கறையின்றி அவசர உணவாகவோ எடுப்பதோ பெருகி வருகிறது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தை குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல், கைக்குத்தல் புழுங்கல் அரிசி கஞ்சி, சிறு குழந்தைகளாயிருப்பின் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி மிக நல்லது. இன்று பிரபலமாகி வரும் ’ஒட்ஸ் கஞ்சி’க்கு சற்றும் குறைவில்லாததும், நம் விவசாயியை வாழ வைப்பதுமான இந்த உணவு நமக்கு உகந்தது.

வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல்/அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளி துண்டுகள், இளம்பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு எடுக்கலாம்.
மதிய உணவில் நிறைய காய்கறிகள், கீரை கூட்டு/கடைசல்,-இவற்றுடன் அரிசி உணவு அளவாய் சாப்பிடுதலும், இரவில் காலை உணவு போல் எளிய சத்தான உணவு எடுத்தலும் அவசியம்.

வயிற்று உப்பிசம், அசீரணம், சத்தமாய் பயமுறுத்தும் ஏப்பம், நெஞ்செரிச்சல், எப்போதெனினும் எடுக்கும் விருந்திற்கு கூட ஏற்படும் உடனடியாக வரும் வாய்த்தொல்லை என ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது, உணவில் கவனம் செலுத்தி சரி செய்வது அவசியம். உணவில் என்ன செய்யலாம்?

அதிக காரத்தை தவிர்த்துவிடுங்கள். மிளகாய் வற்றல் பயன்படுத்தவேண்டிய இடங்களில் மிளகு பயன்படுத்திப்பழகுங்கள். எண்ணெயில் பொரித்த உணவை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. சரியான வேளையில் உணவை எடுக்கத் தவறாதீர். மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை டி.வி.யில் அத்தனை பேரும் அழுது முடிந்தபின்னரோ அல்லது ’டி20’-மேட்ச் முடியும் போதும் தான் சாப்பிட முடியும் என அடம் பிடிக்க வேண்டாம். வலி நிவாரணி மருந்துகளை அவசியமின்றி எடுக்க வேண்டாம். புகை, மது இரண்டும் கேன்சரை வயிற்றுப் புண் வழியாக அழைத்துவரும் கொடூரவிஷயங்கள். மனதை எப்போதும் இலகுவாக வைத்திருங்கள். எப்போதும் டென்ஷனுடன் இருப்பவருக்கு கண்டிப்பாக சீரண்க் கோளாறு வந்துவிடும்.இன்னும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருப்பவர்களுக்கு அசீரணமும் வாய்த் தொல்லையும் கூடுதல் தொல்லை தரக் கூடியன. 

அட! வந்துவிட்டது.? என்ன செய்வது? காலை உணவில் இட்லிக்குப் பிரண்டைத் துவையல் அரைத்து சாப்பிடுங்கள். துவரம் பருப்பு சாம்பாருக்குப் பதிலாக, சிறுபாசிப்பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடவும். வெள்ளை கொண்டைக்கடலைக்கு பதில் சிறுசிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்துங்கள் (அதுவும் கூட குறைந்த அளவில்-மிளகு சீரகம் சேர்த்து). 11 மணிக்கு நீர் மோர் 2 குவளை அருந்துங்கள். மதிய உணவில் காரமில்லாத, பாசிப்பயர்று சேர்த்த, கீரைக் குழம்பு, தேங்காய்ப்பால் குழம்பு(சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் 2 குவளை சீரகத்தண்ணீர் அருந்தவும். இரவில் கண்டிப்பாக வாழைப்பழம், உடன் எளிய ஆவியில் வெந்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடப் பழகுங்கள். காய்கறிகளில் கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளை இவற்றை தவிர்க்கவும். அதிகமான அளவில் மாம்பழமும், பலாப்பழமும் கூட வாயு உண்டாக்கும்.



சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சமபங்கு, இந்துப்பு பாதிபங்கு எடுத்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்பு பொடி போல் போட்டு சாப்பிட்டால் அசீரணம் வராது. சாப்பிட்டதும் வயிறு காற்றடைத்த டயர் மாதிரி வீங்கி கொள்வோருக்கு இந்த அன்னப்பொடியை 1 ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் சாப்பிட வேண்டும். உடனடியாக வாயு விலகி வயிற்றுப்பிசம் விலகும்.
சித்த மருத்துவரிடம் கிடைக்கும் சீரண சஞ்சீவி, சீரக வில்வாதி உள்ளிட்ட மருந்துகள் அசீரணத்தை அகற்ற பெரிதும் உதவிடும். குடற்புண்கள் அதிகமிருப்பதாக எண்டோஸ்கோப் சொன்னால், பிரண்டையில் இருந்தும், உப்பில் இருந்தும் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் பூரண குணமடைய உதவிடும். 

உடன் தினசரி நடை, மூச்சுப்பயிற்சியும் செய்வது அவசியம்.”இரத்தக் கொதிப்பு உள்ளது; சர்க்கரை நோய் உள்ளது; பருத்த உடல் உள்ளது; மிகவும் மன அழுத்தமும் நெருக்கடியும் கூடிய வாழ்வில் உள்ளேன்,” எனில் ஒரு முறை உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து உங்கள் இதயம் சீராக இயங்குகிறதா? என்பதை அறிந்து கொள்வது அவசியம். அப்படி ஏதும் தொந்தரவு இருப்பின் வருடம் ஒருமுறை ஈசிஜி எடுத்துக் கொள்வதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இரத்தக் கொதிப்பு, இரத்தக் கொழுப்பு நிலையை அறிவதும் பெரிதும் அவசியம். மாரடைப்பின் குறிகுணங்களும், வாயுத் தொல்லையின் குறிகுணங்களும் ஏறத்தாழ ஒன்றாய் இருந்து குழப்புவதால், வாய்த்தொல்லையை முதலில் முழுமையாகக் குணப்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம். அதனோடு இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க மருந்தும் வாழ்வியல் மற்றும் உணவு அக்கறையும் இருப்பின் மாரடைப்பு நெருங்காது.

நாற்பதுகளில் இருப்பவர்கள் உடல் நலம் மீதான தினசரி கவனம் பல நோய்களை வராது தடுக்க பெரிதும் உதவிடும். நோய் வந்தபின் அல்லாடுவதைக் காட்டிலும் அடுப்பங்கறை அக்கறையிலேயே ஆரோக்கியமான முதுமைக்கு வித்திடலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About