top ads

செவ்வாய், 16 டிசம்பர், 2014

வயிற்றை சீரமைக்கும் சீரகம்

சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருள் சீரகம். சீரகம் ஒரு சிறுதானியப் பயிர். மருத்துவ குணமுள்ள மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழ சாற்றுடன் சீரக குடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி + சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 

இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் சீரகத்தில் உள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About