குடும்ப மருத்துவர்-அவசர அவசியத் தேவை
”கீ ஹோல் ச்ர்ஜரி”, ”நானோ தொழில் நுட்பம்”, என மருத்துவ உலகம் பல்வேறு வளர்ச்சி பெற்று வரும் காலத்திலும் நம்மில் பலருக்கு தனக்கான ஒரு நல்ல மருத்துவரைத் தேடுவதும், அவரை தேவைப்படும் போது உடனடியாக அணுகுவதும் இன்னமும் சிரமமாகியே வருகிறது. ’குடும்ப மருத்துவர்’ கலாச்சாரம் மாறிப் போய் ”இணைய மருத்துவர்” பெருகி வரும் நேரம் இது. தனக்கான எந்த துன்பத்தையும் இணையத்தில் ’கூகுளில்’ தேடி குணம் பெற எத்தனிக்கும் கூட்டம் இன்று அதிகம். யார் என் முதல் மருத்துவ ஆலோசகர்? எங்கே போய்விட்டனர் சிறுவயதில் தெரு முனையில் மருத்துவமனை நடத்தி வந்த என் ’டாக்டர் மாமாக்கள்’?
அப்பாவின் கட்டைவிரல் பிடித்து, பயத்துடன் பச்சை துணித்திரையைத் தள்ளி மருத்துவர் அறைக்குள் நுழைய ”வாங்க சார்! என்ன மறுபடி வீசிங்கா..? என்ன சாப்பிட்ட? ஐஸ்கிரீமா? அதிரசமா? பாட்டி வந்திருந்தாங்க போலிருக்கு? அப்புறம் உங்க தங்கை வரன் விஷயம் என்னாச்சு? மச்சினன் மதுரைக்கு இண்டர்வியூ போனானே? ரிசல்ட் வந்துச்சா? மிஸஸுக்கு குதிகால் வலி குணமாயிடுச்சா?” என்று என் அப்பாவிடம் கேட்டு முடிக்கையில் என் பயம் விலகி, “மாமா! நடக்கும் போது தான் ரொம்ப இழுக்குது..அப்புறம் சிரிக்கும் போதும் வீசிங் வருது!” என்று பேசியது இன்னும் நன்றாகவே ஞாபகம் உள்ளது. இப்போது பெரும்பாலும் கார்பொரேட் மருத்துவர் என்பவர் மூலஸ்தானத்து முக்கிய கடவுளாகிப் போய், வரம் தர வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது.
முற்றிலும் புதியவர்; முகம் தெரியாதவர்; சமயத்தில் மொழி கூட புரியாதவர்; ஆனால் பிரபல மருத்துவர். பெரும்பாலும் சோதனை முடிவுகளைக் கொண்டு துவங்கும் அவர்தம் சிகிச்சையில் மனம் ஒட்ட மறுக்கிறது. இன்னும் பல நேரம் நமக்கு வந்த துன்பம், உடலால் ஏற்பட்டதா, பென்ஷன் பணம் இன்னும் கைக்கு வராத மன உளைச்சலால் ஏற்பட்டதா என்பதை எடுத்துச் சொல்லாத அந்த பிரபல மருத்துவர் பால் மனம் ஒட்ட மறுக்கிறது. ”அதெல்லாம் பேச நேரமில்லை; பாருங்க உங்களுக்கு அப்புறம் எத்தனை பேர் காத்திருக்காங்க?” என ஏ.சி.யிலும் வியர்க்கும் மேவாய்க்கட்டையை மருத்துவர் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லும் போது, எழுந்து செல்லத் தான் முடிகிறது. அவசியமும் அவசரமுமான தேவை - ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப மருத்துவர். எப்படி அவரைக் கண்டறிவது?
முதலில் உங்கள் குடும்ப மருத்துவரை உங்கள் அருகாமையில் இருக்கும் அண்டை அயலார் தாம் அடையாளம் காட்ட வேண்டும். ” நல்லா பொறுமையா பார்க்கிறாருங்க..” என முதல் சான்றிதழ் கிடைக்க வேண்டும். அது அவர் பெற்றிருக்கும் பல்வேறு உயர்படிப்புச் சான்றிதழைக் காட்டிலும் பெரிது. கொஞ்சம் அருகாமையில் அவர் மருத்துவமனை இருக்க வேண்டும். அவசரத்திற்கு எந்நேரமும் அணுக ஏதுவாக இருக்க வேண்டும். உங்களை உங்கள் குடும்பத்தை நன்கு அறிந்து, நல்லது கெட்டதற்கு வினவ, வீட்டிற்கு வந்து செல்லும் உறவைப் பெற்றிருக்க வேண்டும்.
எந்த ஒரு மருத்துவ ஆலோசனைக்கும் குடும்ப மருத்துவரின் பரிந்துரை அவசியம். உயர் சிகிச்சையோ, உயர் மருத்துவ ஆலோசனையோ அவர்தம் வழிகாட்டுதலில் தான் தொடங்க வேண்டும். ’இந்த டாக்டர் எம்.டி.தானே நியூரோவிற்கு எப்படி இவர் பார்க்கப் போகிறார்?’ என அரைவேக்காட்டு முடிவெடுத்து நேரடியாக, ’நெட்டில் பார்த்தேன், தொலைக்காட்சியில் நல்லா பேசினார்’, என்று நேரடி ஆலோசனைக்குப் போவது தேவையற்ற செலவையும், அதிக கால தாமதத்தைத் தான் வரவழைக்கும். உங்கள் குடும்ப மருத்துவர் உங்கள் உடல்நிலை, மனநிலை, குடும்பச் சூழல், பொருளாதார நிலை, குடும்பத்தில் நிலவும் உறவுப் பிரச்சினைகள் அறிந்திருப்பதால், அவரது தேர்வும் பரிந்துரையும் சரியாக இருக்கும். ஆதலால், உங்கள் முதல் தேடல் உங்களுக்கான குடும்ப மருத்துவராக இருக்கட்டும். அது உங்கள் மெடிக்கல் இன்ஷுரன்ஸூக்கான தேடலை விட அதிகமானது.
குடும்ப மருத்துவர் நவீன மருத்துவராகவோ, சித்த மருத்துவராகவோ பிற பாரம்பரிய மருத்துவராகவோ இருக்கலாம். மருத்துவத் தொழிலை முறையாகப் படித்து, நேர்மையாகவும், சிறப்புடனும், பற்றுடனும், சமூக அக்கறையுடனும் மகிழ்வுடனும் செய்யும், அருகாமையில் மதிப்புடையவருமான மருத்துவராக மட்டுமே கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நல்ல குடும்ப மருத்துவரை தேர்வு செய்தாகிவிட்டது. நல்ல நோயாளியாக எப்படி நடந்து கொள்வது? அதென்ன ’நல்ல நோயாளி’-முரண்பாடான வார்த்தையாகத் தெரிகிறதே என்ற கேள்வி எழலாம். மருத்துவரிடம் எப்படி தன் துன்பங்களைத் தெரிவிப்பது? விரைவில் குணம் பெற மருத்துவரிடம் எப்படி ஒத்துழைப்பது? என்பதும் நோயருக்கு மிக முக்கியம்.
முதலில் ஒரு நோய்க்காக குடும்ப மருத்துவரிடம் அழைத்துப் போகும் போது, குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்கு செல்வது போன்று கும்பலாகச் செல்லாதீர்கள். நோயரைத் தவிர்த்து, கணவனோ, மனைவியோ, பெற்றோரில் ஒருவரோ துணைக்குச் செல்வது போதுமானது. மருத்துவத்தின் முதல்படியே நோயை, நோயரின் வாயிலாகக், கேட்டறிவது தான். நோயரை மருத்துவரிடம் இடையூறு இல்லாமல் பேச விடுங்கள். மருத்துவர் கேட்கும் கேள்விக்கு நோயரே நேரடியாகப் பேசட்டும். “அதைவிடுத்து அவருக்கு ஒண்ணும் தெரியாது சார்! நான் சொல்றேன்”..என குறுக்கே புகுந்து, நோயருக்கு ”கோனார் நோட்ஸ்” போடுவது குழப்பத்தை மட்டுமே விளைவிக்கும். மருத்துவருக்கு உங்கள் சிரமத்தை, துன்பங்களை முதலில் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். “அங்கே அப்படி சொன்னார்கள்..சி.டி.ஸ்கேனில் இப்படிப் போட்டிருக்கிறது” என பேசுவது, மருத்துவரின் நோய்க் கணிப்பைத் திசைதிருப்பும்.முடிந்தவரை கையில் நோய்ப்பட்டியல் எடுத்துச் செல்வது நல்லதல்ல. குறிப்பைத் தயார் செய்யும் போதே, நோயின் துன்பங்களை வரிசைப்படுத்துவதில் குழப்பமும், அதிக முக்கியத்துவம் இல்லாத குறிகுணங்களை மேம்படுத்திச் சொல்லும் தவறும் நிகழ வாய்ப்புண்டு. நேரடியாக பேசும் போது, நிச்சயமாக, உங்கள் துன்பங்கள் அதன் தீவிரத்தைப் பொறுத்தே வெளிப்படும். மறந்து போய்விடுவோம் என நினைத்துப் பட்டியல் தயாரிப்பது தவறு. எதையும் மறைக்காமல், ”இந்த பிரச்சினையை அந்த மருத்துவரிடம் சொல்லிக் கொள்ளலாம்”, என மறைப்பது மிக ஆபத்து. உடல், மனம், சமூகம் ரீதியாக எந்த சிரமம் இருப்பினும் வெளிப்படையாகவும், சுருக்கமாகவும் அதேசமயத்தில் தெளிவாகவும் சொல்வது அவசியம்.
மருத்துவரறையில் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் செல்போன் மவுனமாக இருக்க வேண்டும். குத்துப்பாட்டு ’ரிங்டோன்’ திடீரென வந்த பின், பதறி அணைப்பது தவறு. இன்னும் அக்கரையுடன் கூடவந்த சிலர் நோயரிடம் பேசிக் கொண்டுள்ள போது, வாடிக்கையாளரது பணப் பிரச்சினையை பேசிக் கொண்டிருப்பது கவனம் சிதைக்கும். நோயரது ஆடையும் மிக முக்கியமானது. மூட்டு வலி இருப்பவர், மிக டைட் ஜீன்ஸ் அணிந்து வந்து மேலே அதை உயர்த்திவிடமுடியாமல் மருத்துவர் நேரடியாக அந்த மூட்டில் வீக்கம் உள்ளதா, நிற மாற்றம், சூடு உள்ளதா என சோதிக்க முடியாமல் போக வழி வகுக்கும்.
மருந்துகள் மட்டுமல்லாது, உணவு, வாழ்வியல் அறிவுரைகள், உடற்பயிற்சி குறித்த பரிந்துரைகளையும் அவரது பிரிஸ்கிரிப்ஷன் பேப்பரிலேயே எழுதி வாங்கி பத்திரமாகக் கோப்பில் வைப்பது அவசியம். பலர் சினிமா டிக்கட் மாதிரி முடிந்தவுடன் வீசிவிடுவது உண்டு. அது பெறும் தவறு. வீட்டில் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவக் கோப்பும், அதில், தேதிவாரியாக மருத்துவ குறிப்புகளை அடுக்கி வைத்திருப்பதும் மிக அவசியம்.
இன்னமும் நோயருக்கேற்ற அளவில் மருத்துவர் இந்தியாவில் இல்லை. அதிலும், மருத்துவர் ’நல்ல பெயர்’ பெற்றுவிட்டபின் நோயர் கூட்டம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுவது உண்டு. ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு நாளும் இத்தனை நோயாளிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என திட்டமிடுவது இன்று மருத்துவரிடையே பெரும்பாலும் இல்லை. அவசரம் தவிர, பிற நோயர்களை பதிவு செய்து குறித்த நேரத்தில் பார்ப்பது, மருத்துவர் - நோயர் இருவருக்குமே சரியான ஒன்று. முதியோர், கைக்குழந்தைகள், நோயின் தீவிர நிலையில் உள்ள அவசர நோயாளிகள் தவிர்த்து மற்றோரை ஒரு நாளக்கு இத்தனை நோயாளிகள் தான் என வரையறுத்துப் பார்ப்பது குடும்பமருத்துவருக்குச் சிறப்பாயிருக்கும்.
திரைப்பட அரங்கில் சரியாக படம் போடுவது போல, சரியான நேரத்தில் தன்னை அழைத்து விடுவார் என நினைப்பதும், நேரமாகும் போது பொறுமையிழந்து வரவேற்பரையில் சண்டைகட்டுவதும் நோயருக்கு அழகல்ல. முந்தைய நோயரின் துன்பம் கணிக்க, நேரமாகலாம். அந்நிலை இன்னொரு சமயம் நமக்கும் ஏற்படலாம் எனக் கருதி பொறுமையுடன் இருப்பது நல்லது. காத்திருக்கும் சமயத்தில் எப்படி தன் துன்பங்களை வரிசைப்படுத்துவது என திட்டமிடுவது சிறப்பு.
மருத்துவம் மற்றொரு வணிகமாகி வருவது மறுக்க முடியாத உண்மை. சிறந்த சமூக அக்கரையுள்ள மருத்துவர்களை தேர்வு செய்து, சரியான பரிந்துரையும், வழிகாட்டுதலும், மருத்துவமும் பெற்றுக் கொள்ள கூடுதல் அக்கறையும் மெனக்கெடுதலும் மிக அவசியம்!

TKS
0 கருத்துகள்:
கருத்துரையிடுக