காலை நாலு மணிக்கே எழுந்து கலாட்டா செய்ய ஆரம்பித்தான் ரமேஷ். பதின்மூன்று வயது சிறுவன். நல்ல காய்ச்சல் அடித்தது. பிரச்சினை அதுவல்ல, அப்பா, அம்மா இரண்டு பேரையும் கண்டபடி திட்ட ஆரம்பித்தான்.
“ஏன்டா இப்படிப் பண்ற?”, என்று கேட்ட அப்பாவை,
“யாருடா நீ? போடா!” என்றான்.
“ரமேஷ் கண்ணா! என்னடா ஆச்சு?” என்ற அம்மாவை,
“நீ யாருடி? கிட்ட வராத, அடிச்சுடுவேன்” என்று முறைத்தான்.
எப்போதுமே பள்ளி முடிந்தவுடன், கிரவுண்டுக்குப் போய் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். நேற்றும் அதே தான் நடந்தது. ரொம்பக் களைப்பாக இருந்தான். சாப்பிட்டான். உடனே தூங்கி விட்டான். நடு இரவிலிருந்தே காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்த்து. விடிகாலையிலிருந்து முரட்டுத்தனம், பேத்தல், அப்பா-அம்மாவையே யாரென்று அடையாளம் தெரியவில்லை.
அவர்கள் ரமேஷை முதலில், குழந்தை மருத்துவரிடம்தான் அழைத்துச் சென்றார்கள். ஜுரத்துக்கு மருந்து கொடுத்த அவர்,
“டெலிரியம் மாதிரி இருக்கு. ஆனா, வாந்தி , தலைவலி என்று மூளைக்காய்ச்சல் அறிகுறிகளும் தெரியவில்லை. அக்யூட் சைக்கியாட்ரி பிரச்சினை எதுவும் இருக்குமான்னு தெரியலை. எதற்கும் சைக்கியாட்ரிஸ்டைப் பாருங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர், சிறுவனை என்னிடம் அனுப்பினார்.
“பேத்துவது அதிகமா இருக்கு. அந்தளவுக்கு காய்ச்சல் இல்லை. ஃபன்டஸில் ஏதாவது தெரிகிறதா பாருங்கள்” என்று என்னிடம் அனுப்பினார். மூளைக்காய்ச்சலில், சமயத்தில், ஆப்டிக் நரம்பில் வீக்கம், இரத்தக்கசிவு ஆகியவற்றை கண் மருத்துவத்தில் பார்க்க முடியும்.
ஆனால், கண்ணில் டார்ச் அடித்துப் பார்த்தவுடனேயே பிரச்சினை என்னவென்று எனக்குத் தெரிந்து விட்டது.
“கண்ணில் ஏதாவது மருந்து போட்டீர்களா?”
“இல்லை, டாக்டர்.”
“எங்காவது கண் டெஸ்டிங், இல்லை வீட்டில் இருந்த பழைய மருந்து ஏதாவது?”
“இல்லவே இல்லை டாக்டர்”
விழித்திரை நார்மலாகத்தான் இருந்தது. ஆனால், என் டயக்னோஸிஸ் உறுதியாகி விட்டது.
“உங்க பையன் ஊமத்தங்காய் சாப்பிட்டிருக்கான். என்னன்னு தெரியாம வாயில வச்சிருப்பான்”
“டாக்டர், என்ன சொல்கிறீர்கள்?”. அவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.
“ஆமாம், அவன் கண் பாப்பா விரிந்திருக்கிறது.” “Datura Poisonining. அத்தனை அறிகுறிகளும் உள்ளன.”
உடனே ஆன்ட்டிடோட் கொடுக்க வேண்டும், என்று மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிபாரிசுக் கடிதத்தோடு அனுப்பி வைத்தேன்.
ரமேஷுடைய பெற்றோர் முதலில் என்னை நம்பவில்லை. மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் வழியில், வீட்டுக்குச் சென்று , அவனுடைய பள்ளிக்கூடப் பையை கவுத்துப் பார்த்தபோது, அதிலிருந்து, ஊமத்தங்காய், லொட்டென்று வெளியே வந்து விழுந்ததாம். மறுநாள் வந்து தெரிவித்துவிட்டு, ரமேஷ் நன்றாக இருப்பதாகக் கூறி, நன்றியும் சொல்லி விட்டுப் போனார்கள்.
*******
சன்னமாக "அப்புறம் டாக்டரை மாத்திடுவேன்" என்றான் முரளி. சிரித்தேன்.
முரளிக்கு இப்போது பத்து வயது. ஐந்து வயதில், கண்ணை இடுக்கிக் கொண்டு டிவி பார்க்கிறான், என்று அவன் அம்மா என் க்ளினிக்கிற்கு அழைத்து வந்தாள்.
Astigmatism power. தவறாமல் வருடமொருமுறை வருவது தவிர, அவ்வப்போது கண்ணாடியை உடைக்கும் போது விசிட், கண்ணு வலி விசிட் என்று இப்போ திக் ஃபிரண்ட்.
இந்த முறை, "பவர் மாறவில்லை, கண்ணாடி, ஃபிரேம் எல்லாம் கூட நன்றாக இருக்கிறதே" என்று நான் ஆரம்பித்த போது தான், முதல் வரியில் உள்ள ரெஸ்பான்ஸ்.....
முரளியைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு, அவன் அம்மாவிடம்,"சாய்ச்சுப் பார்த்தா ஏகப்பட்ட ஸ்கிராட்ச். கண்ணாடியை மாத்திடுங்க" என்றேன்.
எங்களைப் பற்றி நன்கு தெரிந்த அம்மா, சிரித்துக்கொண்டே தலையாட்டினார்
விளையாட்டுப் பேச்சும்., வேடிக்கையுமாக FUNDUS (விழித்திரை டெஸ்ட்) பார்க்கத் தொடங்கினேன். துணுக்கென்றது.
இடது கண்ணில், ஆப்டிக் நரம்புக்கு மேலே, ஒரு மிகச்சிறு ரத்தச் சிதறல். (A very tiny splinter haemorrhage)
"முரளிக்கு வேறு ஏதாவது ப்ராப்ளம்? ஃபீவர்......."
"ஒரு வாரம் முன்னாடி ஃபீவர். மூணு நாள்ல சரியாயிடுச்சு டாக்டர், ஏன் கேக்கறீங்க?"
"கொஞ்சம் அனீமிக்கா தெரியறான்" என்றதோடு, கண்ணில் உள்ள, சிகப்புத் தீற்றலை விளக்கினேன்.
"இன்னிக்கே ப்ளட் டெஸ்டும் எடுத்து, அவனோட பீடீயாட்ரிஷினிடம் கொடுங்க"
Complete hemogram, peripheral smear, dengue tests இத்யாதி… இத்யாதி.........
ஒரு வாரம் போயிருக்கும் . முரளியின் அம்மா பதபதைப்பாக ஓடி வந்தாள்.
"டாக்டர், நீங்க தேவையில்லாம டென்ஷன் ஆறிங்கன்னு கொஞ்சம் மெத்தனமா இருந்திட்டேன். திரும்ப ஃபீவர். கையில் கருஞ்சிவப்புத் திட்டுக்கள். உங்க லெட்டரைப் படிச்சுட்டு, டாக்டர், அன்னிக்கே வரலைன்னு திட்டினாரு.
ப்ளட் கான்சர் மாதிரி இருக்கு. சென்னை போகச் சொல்லிட்டாங்க போறதுக்கு முன்னாடி, முரளி உங்களைப் பார்கணும்னான்"
முரளியைப் பார்க்க முடியாமல் என் கண்ணீர் திரையிட்டது." லுகீமியா ட்ரீட்மென்ட் ரொம்ப முன்னேறியிருக்கிறது." என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
நான் முரளியைக் கடைசியாகப் பார்த்தது, அன்று தான். அதற்கப்புறம் ஒரு மாதம் கூட இருக்கவில்லை.சீக்கிரம் கண்டு பிடித்தும், நுரையீரல் தொற்று எமனாகிவிட்டது.
சாமியிடம் போவதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தானாம். "அங்க யாரெல்லாம் இருப்பாங்க? ஸ்கூல் இருக்குமா? அம்மா, எனக்குத் தனியாப் போக பயமாயிருக்கு, நீ வேணா வந்துடேன். அக்காவை, அப்பா பார்த்துப்பாரு.""
கொடுமையிலும் கொடுமை,துக்கம் விசாரிக்கவும், காரியத்திற்கும் வந்த உறவினர்களெல்லாம், குடும்பத்தோடு என்னையும் பார்க்க வந்தார்கள்,
"ஏதாவது இருந்தா கண்டுபிடிச்சு சொல்லுங்க டாக்டர்" என்று.
பல சமயங்களில், கண்களின் வழியாக, பல நோய்களைக் கண்டுபிடிக்க நேரிடும்.
சமயத்தில் மிகவும் வித்தியாசமான நோய்களை கண் மருத்துவர்கள் கண்டு பிடிப்பதுண்டு. கண்கள் உடலின் ஜன்னல் போன்றவை. கண் வழியாக மட்டுமே இரத்த நாளங்களை, நேரில் பார்க்க முடியும்.
என்னிடம் வந்த இரண்டு சிறுவர்களின் கதை இது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக